புதுச்சேரி கடற்கரையில் காணாமல் போன ஆந்திரா தம்பதியினரின் குழந்தை மீட்பு
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி டியூப்ளக்ஸ் கடற்கரை பகுதியில் சுற்றுலா வந்த ஆந்திரா தம்பதியினரின் குழந்தை தவறிய நிலையில், லைப்கார்டுகள் மற்றும் கடலோர காவல்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
ஆந்திராவிலிருந்து சத்யா என்ற தம்பதிகள் குடும்பத்துடன் புதுவைக்கு சுற்றுலா வந்து, டியூப்ளக்ஸ் கடற்கரை அருகில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தங்களது குழந்தையை அவர்கள் தவறவிட்டதை அடுத்து, கடற்கரையில் பாதுகாப்பில் இருந்த லைப்கார்டுகள் புத்துப்பட்டான், முத்துக்குமார் ஆகியோரிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கடலோர காவல்படையை சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் பிரவீண் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து தேடியதில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கடற்கரை காந்தி சிலை அருகில் குழந்தை கண்டறியப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை மீட்டுத் தந்தவர்களிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.


