தமிழ்நாடு

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் நீதிமன்ற வாசலில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் – வழக்கறிஞர்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்ற வளாக வாயில் முன்பு, விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மனைவியை அவரது கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் இயங்கி வரும் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் – மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற நுழைவு வாயில் அருகே மறைந்திருந்த அவரது கணவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்ய வெறித்தனமாக முயன்றுள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, நீதிமன்ற வாசலில் இருந்த சக வழக்கறிஞர்கள் உடனடியாக ஓடிவந்து தாக்குதலை தடுக்க தீவிரமாக முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னை தடுக்க வந்த வழக்கறிஞர்களையும் அரிவாளை காட்டி வெட்ட முயன்றதால் நீதிமன்ற வளாகத்தில் கடும் கூச்சல் குழப்பமும், பதற்றமும் நிலவியது. எனினும், அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் துணிச்சலாக செயல்பட்டு, அரிவாளுடன் நின்ற கணவனை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

நீதிமன்ற பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் உரிய முறையில் பாதுகாப்புக்கு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் துணிச்சலாக இந்த வெறிச்செயல் அரங்கேற்றப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரை வழக்கறிஞர்கள் அப்பகுதி போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன