தமிழ்நாடு

தீபாவளி நேரத்தில் ஆவின் பொருட்கள் விலை உயர்வா? எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஆவின் பொருட்கள் மீதான விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களுக்கு ‘வெற்றி தீபாவளி’ பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை அரசு கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது. மக்கள் தீபாவளி பண்டிகையின்போது அதிகளவில் நெய் மற்றும் இனிப்புகளை வாங்குவார்கள் என்பதை நன்கு அறிந்து, இந்தச் சரியான தருணத்தைப் பார்த்து விலையை உயர்த்தி லாபம் ஈட்ட அரசு நினைப்பது எத்தகைய மனநிலை?” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில் சாடியுள்ள அவர், “சாதாரண வியாபாரிகள் கூட பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி விற்பனையை அதிகரிக்கவே முயற்சிப்பார்கள். ஆனால், தற்போதைய அரசோ சினிமாவில் தோன்றும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்பட்டு வருகிறது. நடிகராக இருந்த காலத்தில் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்பட டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு ‘பிளாக் டிக்கெட்’ முறையில் விற்பனை செய்வது போல, தற்போது இனிப்புகளின் விலையையும் அரசு உயர்த்தியுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர், “அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதனைத் தடுப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்று விளக்கம் அளிக்க எந்த அமைச்சரை நியமிக்கப் போகிறீர்கள்?” என்று விமர்சித்துள்ளார். பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை எவ்வித கூடுதல் நிதிச் சுமையுமின்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த கடுமையான விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன