புதுச்சேரி

காமராஜ் நகரில் குடியிருப்புகளுக்குள் வெளியேறும் கட்டுமானக் கழிவுநீர்: டி-மார்ட் கட்டுமானப் பகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் ஆய்வு!

புதுச்சேரி:

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் டி-மார்ட் வணிக வளாகக் கட்டுமானப் பகுதியிலிருந்து வெளியேறும் நீர், அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், அப்பகுதிக்கு நேரில் சென்று கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விரிவான கள ஆய்வு மேற்கொண்டார்.

காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரபல டி-மார்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு தேங்கியுள்ள நீரும், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் உபயோக நீரும் வெளியேறி, அருகிலுள்ள அண்ணாமலை நகர் மற்றும் சுதந்திரப் பொன்விழா நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். வீடுகளுக்குள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், டி-மார்ட் கட்டுமானப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம், எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கழிவுநீர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தெருக்களுக்குள் வெளியேறக் கூடாது என்றும், அதற்கான மாற்று வடிகால் வசதிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் பிற அடிப்படைப் பிரச்னைகளைக் கேட்டறியும் வகையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இருசக்கர வாகனத்தில் சென்று மொட்டைத்தோப்பு மற்றும் ஆர்.வி. நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அவர் தீவிரமாக ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, எல்.ஜே.கே. கட்சியின் நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன், காமராஜ் நகர் தொகுதித் தலைவர் கோகுல கண்ணன், தொகுதிச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சியின் வார்டு தலைவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன