புதுச்சேரி சென்டாக்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்பு கலந்தாய்வு அறிவிப்பு – புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதுச்சேரி, நவ. 4: புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு சுற்று கலந்தாய்வு குறித்து சென்டாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தயானந்த் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு சுற்று கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தி தங்களது பாடப்பிரிவு விருப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்டாக் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காலி இடங்களின் விவரங்களைப் பார்வையிட்டு, மாணவர்கள் தங்களது டேஷ்போர்டு உள்நுழைவு (login credentials) விவரங்களைப் பயன்படுத்தி விருப்பப் பதிவை மேற்கொள்ளலாம். மேலும், நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை புதிய விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விருப்பத்தை உறுதி செய்து, கட்டணத்தை செலுத்தி விருப்பப் பதிவை மேற்கொள்ள வேண்டும். எனினும், ஏற்கனவே உள்ள தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட பிறகே புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டில் 35 இடங்களும், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டில் 27 இடங்களும், மாஹே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டுப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட பின்னரும் நிரப்பப்படாத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றப்படும் என்றும், சிறப்பு கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற பின்னர் சேராத மாணவர்களின் முழு கல்விக் கட்டணமும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.