புதுச்சேரியில் கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்ஸ் கைத்தறி கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்படும் கைத்தறி துணி வகைகளை நியாயமான விலையில் வழங்குவதையும் பல்வேறு ஜவுளி வகைகளை ஒரே இடத்தில் விற்பனை செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி கண்காட்சியைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நலிந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி கண்காட்சி நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் பொதுமக்களுக்கு 25 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கதர் ஆடைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு 2.25 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 3 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், பருவமழையைச் சமாளிக்க பொதுப்பணித்துறை, மின்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.