தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் 200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: தீயணைப்புத்துறை தகவல்
புதுச்சேரி, அக். 24: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் 200 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் புதுச்சேரி நகரப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மிஷன் வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் தீபாவளி பலகாரங்கள், பட்டாசு வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி அருகிலுள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதி மக்களும் அதிகளவில் வந்து செல்வதால் கடைவீதிகள் களைகட்டியுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் புதுச்சேரி முழுவதும் பட்டாசு விற்பனை நிலையங்கள் அமைப்பதற்காக 250-க்கும் மேற்பட்டோர் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறையிடம் தற்காலிக உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியுள்ள சுமார் 200 கடைகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத சுமார் 25-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


