வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் நேரடி உத்தரவு: புதுச்சேரியில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்
புதுச்சேரி, அக். 25:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில், மழைநீர் தேங்காமல் விரைந்து வடியும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராஜ்பவன் தொகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணனுடன் இணைந்து கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அடைப்புகளை உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்றும், வடிகால்களைத் தூர்வாரி சீரமைத்து மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். எக்காரணத்தைக் கொண்டும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வீதியோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் குப்பைகளை மழைநீர் வடிகால்களில் கொட்டாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் முக்கிய வடிகால் வாய்க்காலையும் பார்வையிட்ட ஆட்சியர், அதனால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் நோக்கில் கருங்கற்கள் கொட்டி கரையைப் பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.