புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும் “வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்” பிரச்சாரம்: காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளில் வாக்கு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் பேரியக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 சட்டமன்றத் தொகுதிகளிலும் “வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்” (Save Vote, Save Nation) என்ற பெயரில் விரிவான பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்க புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) காலை 11.00 மணியளவில் புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு தங்களது களப்பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
கூட்டத்தில், தேசிய அளவில் ஆளும் பாஜக அரசு பல்வேறு மாநிலங்களில் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும், அதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒத்துழைப்பு நல்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜனநாயகத்தைக் காக்கவும், தேர்தல் அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து புதுச்சேரி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி பிராந்தியத்திற்குட்பட்ட 23 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிப் பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள், துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகளை ஒருங்கிணைக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் இந்த பிரச்சார இயக்கம் புதுச்சேரி முழுவதும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.