புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிப்பு: அரசாணை வெளியீடு!
புதுச்சேரி, நவ. 04: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் உள்துறை சார்புச் செயலர் எம்.வி. ஹிரன் வெளியிட்டுள்ள அரசாணையில் (G.O.Ms.No.108), துணைநிலை ஆளுநரின் ஒப்புதலின்படி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், தொழிற்கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், செலாவணி முறிச் சட்டம் 1881-ன் (Negotiable Instruments Act, 1881) கீழ் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாகச் செயல்படும் எனவும் அந்த அரசாணையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


