புதுச்சேரியில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆய்வுக் கூட்டம்: மத்திய இணையமைச்சர் நிமுபென் பாம்பானியா, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் சார்பில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம், ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக மத்திய இணையமைச்சருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஏழை, எளிய மக்களுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டங்களை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பது, நவீன தொழில்நுட்ப வசதிகளை நுகர்வோர் துறையில் புகுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. புதுச்சேரி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மத்திய அரசு வழங்கும் திட்ட உதவிகளை விரைவுபடுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரி மக்களுக்கு எவ்வித தொய்வுமின்றி சென்றடைவதை அரசு நிர்வாகம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
யூனியன் பிரதேசத்தில் எளிய குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நுகர்வோர் குறைகளை உடனுக்குடன் களையும் நடைமுறைகளைத் தீவிரப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

