காரைக்காலில் நெல் கொள்முதல் விதிமுறைகளை மாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சரிடம் எம்எல்ஏ விக்னேஸ்வரன் நேரில் வலியுறுத்தல்!

புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய உணவுக் கழகத்தின் (FCI) நெல் கொள்முதல் தரநிலைகளில் தளர்வுகளும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜான்குமார் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், காரைக்கால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு கள எதார்த்தங்களை எடுத்துரைத்தார். காரைக்காலில் எப்.சி.ஐ மூலம் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதலில் தற்போது பின்பற்றப்படும் கடுமையான தரநிலைகளால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான நெல் கொள்முதல் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பிராந்தியத்தின் பருவநிலை மற்றும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப கொள்முதல் தரநிலைகள் மாற்றி நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், காரைக்கால் பிராந்திய விவசாயிகளின் விளைபொருட்களை எவ்வித தடையுமின்றி உடனடியாகக் கொள்முதல் செய்யும் வகையில், மாநில அரசு சார்பில் காரைக்காலில் பிரத்யேக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
காரைக்கால் விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய இணையமைச்சர், இவ்விவகாரங்களை உரிய முறையில் பரிசீலித்து விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகளை எட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காரைக்கால் விவசாயிகளின் உழைப்புக்கு உரிய நியாயமான விலை கிடைக்கவும் கொள்முதல் பணிகளை எளிதாக்கவும் அரசு மட்டத்தில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


