புதுச்சேரி

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்: முதல்வர் ரங்கசாமியிடம் எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் கோரிக்கை!

புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழப் போதிய அவகாசம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, முதலமைச்சர் ரங்கசாமி அதனை உடனடியாக ஏற்று விடுமுறை அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே பாணியில், இந்த ஆண்டும் மக்கள் சிரமமின்றிப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்புவதற்கு ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு இத்தகைய முடிவை முன்கூட்டியே அறிவிக்கும்பட்சத்தில் மக்கள் தங்களது பயணத் திட்டங்களை எவ்வித இடையூறுமின்றி அமைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பண்டிகை விடுமுறை முடிவடைந்த பின்னர் புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வருவதற்கும், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்குச் செல்வதற்கும் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இருப்பதில்லை என்பதை அரசு நிர்வாகம் தீவிரக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் தங்களது இருப்பிடங்களுக்கும் பணிக்கும் திரும்புவதை உறுதிசெய்ய வேண்டும்.

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் எந்தவித அலைச்சலுமின்றி பயணம் மேற்கொள்ளவும் காரைக்கால் – புதுச்சேரி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தனது அறிக்கையின் வாயிலாக முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன