கிருமாம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: ஏம்பலம் எம்.எல்.ஏ. மோகன்தாஸ் வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கம் பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அண்ணல் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தகுதியான மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இவ்விழாவில், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. மோகன்தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.
கிராமப்புறப் பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்து கல்வி பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தினசரி பயணத்தை எளிதாக்கவும், இடைநிற்றல் இன்றி உயர் கல்வியைத் தொடர ஊக்கமளிக்கவும் புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களின் போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் இந்த இலவச மிதிவண்டித் திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர், விரிவுரையாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி ஊழியர்கள், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மிதிவண்டிகளைப் பெற்றுக்கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

