புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்: கடற்கரைச் சாலையில் கம்பீரமாக நடைபெற்ற இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை!

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரைச் சாலையில் பல்வேறு படைப்பிரிவினர் பங்கேற்ற இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை வளாகப் பகுதியில் பிரம்மாண்ட விழா மேடைகள் மற்றும் சிறப்புப் பந்தல்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வது வழக்கம்.
இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் தேசிய மாணவர் படை (NCC) உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகள் கலந்துகொண்ட முழு அளவிலான இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. காவல் துறையின் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, கம்பீரமான சீருடைகளுடன் வீரர்கள் ஒத்திகை அணிவகுப்பை மேற்கொண்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்வை உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொடியேற்றுதல், மரியாதைகள் செலுத்துதல், அணிவகுப்பு ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவை முறைப்படி சரிபார்க்கப்பட்டன.
விடுதலை நாள் விழாவையொட்டி கடற்கரைச் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், விழா நடைபெறும் நேரத்தில் கடற்கரைச் சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தடையின்றி நிகழ்ச்சியைக் காணத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



