முதலியார்பேட்டை சுதானா நகரில் தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்: பொதுப்பணித்துறை மெத்தனத்தால் பாஜகவினர் களமிறங்கி தூய்மைப்பணி!
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை சுதானா நகர் பகுதியில் அடைபட்டுக் கிடந்த கழிவுநீர் வாய்க்காலைத் தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரி பாஜக வர்த்தகப் பிரிவினர் மற்றும் நைனார்மண்டபம் முன்னாள் கவுன்சிலர் ஏ.சத்தியராஜ் ஆகியோர் நேரடியாகக் களத்தில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட சுதானா நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் நீண்ட நாட்களாகக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் சகதி தேங்கி நின்றதால் நீர் வழிந்தோட வழியின்றி முடங்கியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயகரமான சூழல் நிலவி வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் நைனார்மண்டபம் முன்னாள் கவுன்சிலர் ஏ.சத்தியராஜ் தரப்பில், கழிவுநீர் கால்வாயை உடனடியாகத் தூர்வாரி சீரமைக்கக் கோரி புதுச்சேரி பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், மனு அளித்து நீண்ட நாட்களாகியும் அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், மழைக்காலத்தில் கழிவுநீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையிலும், பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா (Swachh Bharat) விழிப்புணர்வின் கீழ் புதுச்சேரி பாஜக வர்த்தகப் பிரிவு நிர்வாகிகள் சுதானா நகருக்கு நேரில் வந்தனர். முன்னாள் கவுன்சிலர் ஏ.சத்தியராஜ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாய்க்காலில் இறங்கி, தேங்கிக் கிடந்த சேறு மற்றும் அடைப்புகளைத் தூர்வாரி தண்ணீரை வெளியேற்றினர்.
பொதுமக்களின் அடிப்படைப் புகார்கள் மீது பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகர் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைத் துரிதமாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English summary: Puducherry BJP trade wing members and former Nainarmandapam councillor A. Sathiyaraj cleaned a clogged sewage drain in Sudhana Nagar, Muthialpet, themselves. According to the report, a petition to Public Works Department officials to desilt the drain had drawn no action for a long time. Residents asked officials to act without delay and to maintain rainwater drains across the town.
