புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களாக ஊதியமில்லை: தீபாவளிக்கு முன் மானிய நிதியை விடுவிக்க ஊழியர்கள் வலியுறுத்தல்!
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (PTU) ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாக அரசு மானிய நிதி (Grant-in-Aid – GIA) விடுவிக்கப்படாததால், தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையிலும் ஊதியமின்றி ஊழியர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய இந்த மானிய நிதி தொடர்பான அரசு கோப்பு, கல்வித்துறை மற்றும் நிதித்துறை ஆகியவற்றில் நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்தது. பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பிறகு, தற்போது அக்கோப்பு ஒப்புதலுக்காக கடந்த மூன்று நாட்களாக ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிர்வாக ரீதியான இந்த தொடர் கோப்புத் தாமதத்தால், ஊழியர்களின் மாதாந்திர ஊதிய வழங்கல் தொடர்ந்து முடங்கியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஊழியர்களின் தொடர் முறையீடு மற்றும் போராட்டங்களின் விளைவாக, பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு நிதியிலிருந்து (Internal Fund) தற்காலிகமாக ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. இருப்பினும், நடப்பு மாதங்களிலும் மானிய நிதி வராததால் வங்கிக் கடன் தவணைகள் (EMI), கல்விக் கடன் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணங்களை உரிய தேதியில் செலுத்த முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இதனால் வங்கிகளின் அபராதம் மற்றும் கூடுதல் வட்டிச் சுமையை அவர்கள் சுமக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி பணம் ரூ.122.91 கோடி மற்றும் பாண்லே பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.68 கோடி கொள்முதல் விலை வித்தியாசத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நிதிகள் துரிதமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியத்திற்காக மாதக் கணக்கில் காத்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத ஊதியம் என்பது சலுகையோ அல்லது உதவியோ அல்ல; அது தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமை என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு நிர்வாகக் கோப்பு தாமதங்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளனர். எனவே, புதுச்சேரி அரசும் துணைநிலை ஆளுநர் செயலகமும் உடனடியாகத் தலையிட்டு நிலுவையில் உள்ள GIA நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இத்தகைய ஊதியத் தாமதம் ஏற்படாத வகையில் நிரந்தர நிதி நடைமுறையை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English summary: Teaching and non-teaching staff of Puducherry Technological University (PTU) said they have not received salaries for three months because the government’s grant-in-aid has not been released. According to the report, the file is pending with the Lieutenant Governor’s office for the past three days, and one month’s pay was given earlier from the university’s internal fund. The employees have urged the Puducherry government and the Lieutenant Governor’s secretariat to release the funds before Deepavali.