புதுச்சேரி தவளக்குப்பத்தில் சோகம்: விறகு அடுப்பில் தின்னர் ஊற்றிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!
புதுச்சேரி, அக் 7:
புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பத்தில் விறகு அடுப்பு எரியாததால் தின்னர் ஊற்றிய போது ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி (46), பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஒஸாரம்மாள் (39). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி ஒஸாரம்மாள் வீட்டில் உள்ள விறகு அடுப்பில் வெந்நீர் வைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். அப்போது அடுப்பு சரியாக எரியாத காரணத்தினால், வீட்டில் பெயிண்ட்டில் கலக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த தின்னரை (Thinner) எடுத்து அடுப்பில் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பற்றியது. இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஒஸாரம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தவளக்குப்பம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



