கூனிச்சம்பட்டு கிராமத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் நமச்சிவாயம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு கிராமத்தில் நிலவி வந்த மின் பற்றாக்குறையை போக்கும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்கள்) புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி தொடங்கி வைத்தார்.
கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள புதுநகர் மற்றும் விஐபி நகர் பகுதிகளில் குடியிருப்புவாசிகளின் நீண்ட நாள் தேவையாக இருந்த சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்தடை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் புதிய மின்மாற்றிகளை மின்சார துறை மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த அமைச்சர், பொதுமக்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

