புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியை அவதூறாக எழுதிய மாணவர்கள் மூன்று பேர் இடைநீக்கம்
புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக எழுதியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் திறக்கப்பட்ட பல்கலைக்கழக வசதி மைய கட்டிடத்தின் சுவரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏபிவிபி மாணவர்கள் அமைப்பினர் பதிவாளர் குணசேகரனிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இதில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டனர். அதன்பேரில் இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக செயலர் அக்னி, ஆஷிக், ஆசி மற்றும் ஒரு மாணவி உள்பட மூன்று பேரை பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது.
முன்னதாக, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பாஜகவினர் பல்கலைக்கழகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் குணசேகரனிடம் இது தொடர்பாக புகார் மனுவும் அளிக்கப்பட்டது. பாஜக இளைஞரணி மாநில தலைவர் ஆடலரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


