புதுச்சேரியில் மார்ச் 3-இல் பாஜக பாதயாத்திரை: மாநில தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் “ஜனநாயகம் காப்போம்! வன்முறை கும்பலை வேரோடு வேரறுப்போம்!” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வரும் மார்ச் 3-ஆம் தேதி பிரம்மாண்ட பாதயாத்திரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பாதயாத்திரையை எழுச்சியோடு நடத்துவது தொடர்பான விரிவான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சரும் பாஜக முக்கியத் தலைவருமான ஏ. நமச்சிவாயம், புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் ஆர். செல்வம், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பாதயாத்திரைக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், அசோக் பாபு, தீபாஞ்சான், பாஸ்கர், தங்க விக்ரமன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மார்ச் 3-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பாதயாத்திரையை மிகச் சிறப்பாகவும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பெரும் ஆதரவோடும் ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி வாரியாகப் பொதுமக்களை ஒருங்கிணைப்பது, பேரணி செல்லும் வழித்தடங்களை இறுதி செய்வது மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு நிர்வாகிகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரியின் அமைதி மற்றும் ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்கும் வகையில் அமையவுள்ள இப்பாதயாத்திரை மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி-பிரிவுப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு, பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்துவது என ஒருமனதாக உறுதியேற்றனர்.
