மாமல்லபுரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம் தொடக்கம்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னெடுப்பில் 30 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

மாமல்லபுரம்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தின் (Legislators Leadership Programme – LLP) முதல் அணிக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை விமரிசையாகத் தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. JCD. பிரபாகர் அவர்களின் சீரிய முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தனித்துவமான முகாமில், முதல் கட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். சட்டமன்றப் பணிகளை நவீன மேலாண்மைத் திறன்களுடன் இணைத்து முன்னெடுக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி முகாமில், மக்கள் நலன் சார்ந்த நவீன நிர்வாக உத்திகள், சட்டப்பேரவை விதிமுறைகள் மற்றும் பொறுப்புகள், பொதுச் சேவையில் முன்மாதிரி தலைமைத்துவம், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காண்பதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசின் பல்வேறு துறைகளுடன் துறைசார்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுதல், தொகுதி மக்களின் தேவைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து திட்டமிடுதல் மற்றும் வெளிப்படையான பொறுப்புணர்வுடன் மக்கள் சேவையாற்றுவது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. N. ஆனந்த் நேரில் கலந்து கொண்டார். அவருடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு. மு. ரவிசங்கர், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு சட்டமன்ற அரசு தலைமை கொறடா திரு. R. சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
மேலும் இந்த உயர்மட்டப் பயிற்சி முகாமில், சிறப்பு விருந்தினர்களாக மேகாலயா மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் டாக்டர் சம்பத் குமார் இ.ஆ.ப., மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. கே. சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவையான சட்ட நடைமுறைகள், மக்கள் நலத் திட்ட அமலாக்கம் மற்றும் தலைமைத்துவப் பண்புகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இப்பயிற்சி அமர்வில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் திருமதி ஆர். சாந்தி, கூடுதல் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர் திருமதி பி. தேன்மொழி உள்ளிட்ட சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் ஆக்கப்பூர்வமான உட்கட்டமைப்பு மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சிப் பட்டறை மக்கள் பிரதிநிதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)

