புதுச்சேரி

அரும்பார்த்தபுரம் திரௌபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.19 லட்சம் நிதி: முதல்வர் ரங்கசாமி காசோலை வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட அரும்பார்த்தபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருப்பணிகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.19 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் என். ரங்கசாமி இன்று கோவில் நிர்வாகிகளிடம் நேரில் வழங்கினார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களைப் புனரமைத்து, குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை நடத்திட அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரும்பார்த்தபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவில் திருப்பணிகளுக்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K. நாராயணசாமி முன்னிலை வகித்தார். கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகிகளிடம் முதல்வர் ரங்கசாமி காசோலையினை முறைப்படி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரும்பார்த்தபுரம் கிராம முக்கிய பிரமுகர்கள், கோவில் திருப்பணி குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திருப்பணி நிதியைப் பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகிகள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிதி உதவி வழங்கிய முதலமைச்சர் ரங்கசாமிக்கும், நடவடிக்கை மேற்கொண்ட தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் K. நாராயணசாமிக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

புதுச்சேரி அரசு ஆன்மீக வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கவும் உரிய நிதி ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன