புதுச்சேரியில் தமிழ்மாமணி மன்னர் மன்னனின் 99-வது பிறந்தநாள்: பாவேந்தர் நினைவு இல்லத்தில் தமிழறிஞர்கள் மலரஞ்சலி!

புதுச்சேரி: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் புதல்வரும், முதுபெரும் தமிழறிஞருமான ‘தமிழ்மாமணி’ மன்னர் மன்னன் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள பாவேந்தர் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு இலக்கிய அமைப்பினர் மற்றும் தமிழார்வலர்கள் சார்பில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து தலைமை தாங்கி, மன்னர் மன்னன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பாவேந்தரின் தமிழ் மரபையும் இலக்கியச் சுடரையும் தளர்வின்றி தன் வாழ்நாள் முழுவதும் சுமந்து நின்றவர் மன்னர் மன்னன் என்று இந்நிகழ்வில் பெருமையுடன் நினைவுகூரப்பட்டது.
இவ்விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் ‘கல்விச் செம்மல்’ சீனு. மோகன்தாசு, பொருளாளர் ‘கலைமாமணி’ பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் ப. திருநாவுக்கரசு மற்றும் வி. கலியபெருமாள் உள்ளிட்ட தமிழ்ச் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழார்வலர்கள் பலரும் கலந்துகொண்டு மன்னர் மன்னனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவனர் ‘கலைமாமணி’ கோ. பாரதி சிறப்பாகச் செய்திருந்தார். மன்னர் மன்னன் ஆற்றிய அரும்பெரும் தமிழ்ப் பணிகளையும், பாவேந்தர் படைப்புகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த அவரது தொண்டுகளையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
English summary: On the 99th birthday of ‘Tamil Mamani’ Mannar Mannan, son of poet Bharathidasan, literary organisations and Tamil enthusiasts paid floral tributes to his portrait at the Bharathidasan Memorial House on Perumal Koil Street in Puducherry. Puducherry Tamil Sangam president Dr. V. Muthu presided and garlanded the portrait, with other Sangam office-bearers present, and arrangements were made by Bharathidasan Foundation founder Ko. Bharathi. Speakers recalled his Tamil service and his work in preserving Bharathidasan’s writings.

