புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தீபாவளி வேட்டி சேலை பணம்: ரூ.13.38 கோடி வங்கிக் கணக்கில் வரவு!
புதுச்சேரி, அக்.27:
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக தலா ரூ.1,000 நேரடி பணப்பரிமாற்றம் (DBT) மூலம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் 18 வயது பூர்த்தியடைந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு பண்டிகைக் காலங்களில் ஆடைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017 முதல் பணமாக வழங்கப்பட்டு வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்னர் இத்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் இந்தாண்டும் தலா ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இதன்படி, புதுச்சேரி பகுதியில் உள்ள 35,440 ரேஷன் கார்டுகளைச் சேர்ந்த 1,03,423 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 9,712 ரேஷன் கார்டுகளைச் சேர்ந்த 25,525 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரமும், ஏனாம் பகுதியில் 2,028 குடும்ப அட்டைகளைச் சேர்ந்த 4,942 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 42 ஆயிரமும் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 47,189 ரேஷன் கார்டுகளில் உள்ள 1,33,890 பட்டியலின மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் நிதி, அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary: Puducherry’s Adi Dravidar Welfare Department will credit Rs 1,000 each by direct bank transfer to Scheduled Caste and Scheduled Tribe beneficiaries, in place of free dhoti and saree for Diwali, Chief Minister N. Rangasamy and Minister Sai J. Saravanankumar said. In all, Rs 13.38 crore goes to 1,33,890 beneficiaries on 47,189 ration cards: about Rs 10.34 crore in Puducherry, Rs 2.55 crore in Karaikal and Rs 49.42 lakh in Yanam. Cash has been given instead of clothes since 2017.