புதுச்சேரி

ஓய்வூதியர்களுக்கு வீட்டிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவை: புதுச்சேரி அஞ்சல் துறை அறிவிப்பு!

புதுச்சேரி, நவ. 3:
புதுச்சேரியில் உள்ள ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர மின்னணு உயிர்வாழ் சான்றிதழை (Digital Life Certificate) வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கும் வசதியை அஞ்சல் துறை ஏற்படுத்தியுள்ளதாக புதுவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இன கொல்லு காவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அஞ்சல் துறை, ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ (IPPB) வாயிலாக ஜீவன் பிரமாண் இணையதளத்தில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் இந்த எளிய வசதியை வழங்கியுள்ளது. வயது முதிர்ந்த முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்கள் நேரில் சென்று வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் தங்களது பகுதிக்கு வரும் தபால்காரர் அல்லது அஞ்சல் பட்டுவாடா ஊழியர்கள் மூலம் கைரேகை பயோமெட்ரிக் முறை அல்லது முக அங்கீகார (Face RD) செயலி வாயிலாக இல்லத்திலேயே சான்றிதழைப் பதிவு செய்துகொள்ளலாம். குறைந்தபட்ச சேவைக் கட்டணத்தில் இது வழங்கப்படும் அதேவேளையில், வருங்கால வைப்பு நிதி (EPFO), பி.எஸ்.என்.எல். மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஓய்வூதியர்களுக்கு இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த இல்லம் தேடி வரும் அஞ்சல் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் 155299 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 033-2029000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களையும் நேரில் அணுகி விவரங்களைப் பெறலாம் என்று அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன