சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்: சென்னையில் நவம்பர் 6-இல் கூடுகிறது!

சென்னை, 04/11/2025:
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான முக்கிய கலந்தாய்வுக் கூட்டம், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தமிழ் மாதமான ஐப்பசி 20ஆம் நாள் (06-11-2025) வியாழக்கிழமை காலை 10:00 மணி முதல் இக்கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள முப்பாட்டன் முருகன் கோயில் அருகில் அமைந்திருக்கும் பீமாஸ் உண்டுறை விடுதி (Hotel Bhimaas Temple Tree) அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், களப்பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித விலக்குமின்றி குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்குமாறு தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

