தமிழ்நாடு

ஊத்தங்கால் தனியார் மின் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்: அருண்மொழித்தேவன் நேரில் ஆதரவு

கடலூர்:
கடலூர் மாவட்டம் ஊத்தங்கால் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில், தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கால் பகுதியில் இயங்கி வரும் எம்.இ.ஐ.எல் நெய்வேலி எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (MEIL Neyveli Energy Private Limited) நிறுவனம், என்எல்சி இந்தியா நிறுவனத்திடமிருந்து நிலக்கரியைக் கொள்முதல் செய்து மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை இவ்விரு பிரிவுகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரே சீரான ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மைக்காலமாக சிவில் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியம் குறைக்கப்பட்டு பாரபட்சமாக வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்தும், முன்பைப் போலவே மெக்கானிக்கல் ஊழியர்களுக்கு இணையான சம ஊதியத்தைத் தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தியும், நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் ஆ. அருண்மொழித்தேவன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வருகை தந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் பிரிவு தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து தனது ஆதரவினைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிறுவனம் செவிசாய்க்க வேண்டும். இப்பிரச்சினையில் கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன