இராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: கல்லூரி மாணவர்களிடையே மாவட்ட எஸ்.பி. ஜி.சந்தீஷ் நேரில் விழிப்புணர்வு உரை!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் நேரில் கலந்துகொண்டு மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து விரிவாக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் பேசுகையில், இன்றைய இளைய தலைமுறையினர் இடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் குறித்து விளக்கினார். போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் தனிநபர் சந்திக்கும் உடல் மற்றும் மனநலச் சீர்கேடுகள் மட்டுமின்றி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார, உளவியல் சீரழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தில் உருவாகும் தீவிர எதிர்மறை விளைவுகள் குறித்தும் அவர் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என எஸ்.பி. சந்தீஷ் வலியுறுத்தினார். மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு ஒருபோதும் இடம் தராமல் தங்களது கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வை தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், தங்களது சக நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களையும் மாணவர்களையும் நல்வழிப்படுத்தும் வகையிலும், போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையிலும் கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகளை காவல்துறை தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

