கதிர்காமம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ எஸ்.எஸ். அழகு: பொதுமக்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கல்!
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் சட்டமன்றத் தொகுதியில் தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் வகையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு என்ற அழகானந்தம் எம்.எல்.ஏ வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அழகு அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியின் நல்லாசியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, கதிர்காமம் தொகுதியின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது. குறிப்பாக சாரதாம்பாள் நகர், மணக்குள விநாயகர் சாஸ்திரி நகர், ஆருத்ரா நகர், அம்பாள் நகர் மற்றும் ரத்னா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்தார்.
“சொல் அல்ல செயல் – நமது ஒற்றுமையே நமது தொகுதியின் வளர்ச்சி” என்ற உன்னத வாசகத்தை முன்னிறுத்தி இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள், சாலை மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து கேட்டறிந்த எம்.எல்.ஏ அழகு, தொகுதியின் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், அழகு அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்குப் பயனுள்ள சிறப்புப் பரிசுகளும் அன்போடு வழங்கப்பட்டன.
தங்கள் பகுதிக்கு நேரடியாக வருகை தந்து குறைகளைக் கேட்டறிந்து, நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி தாய்மார்களும், முதியவர்களும், இளைஞர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியுடன் நின்றுவிடாமல், தொகுதி மக்களின் குறைகளைக் களத்தில் இறங்கி நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண்பதே தங்களது முதன்மை நோக்கம் என்றும், கதிர்காமம் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய கள ஆய்வுகளும் மக்கள் சந்திப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
