காரைக்கால் விவசாயிகளுக்கு ₹2.89 கோடி பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை: முதல்வர் ரங்கசாமி காசோலை வழங்கினார்!
புதுச்சேரி, நவ. 5:
காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், பருத்தி மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.2.89 கோடி மதிப்பிலான பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையை முதலமைச்சர் என்.ரங்கசாமி வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் பருத்தி மற்றும் பல்வேறு பயறு வகைகள் சாகுபடி செய்த 2,165 விவசாயிகள் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை பெறத் தகுதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் சி.ராஜசேகரன் முன்னிலையில், முதலமைச்சர் என்.ரங்கசாமி பயனாளிகளான காரைக்கால் விவசாயிகளுக்கு உரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அரசின் இந்த ஊக்கத்தொகை காரைக்கால் பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

