அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.16.95 கோடி பணிக்கொடை: முதலமைச்சர் ரங்கசாமி காசோலை வழங்கினார்!
புதுச்சேரி, நவம்பர் 05: புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் (PCDW & DAP LTD) கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity) வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான காசோலையை முதலமைச்சர் என். ரங்கசாமி முறைப்படி வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 361 அங்கன்வாடி மகளிர் பணியாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.12 கோடியே 45 லட்சத்து 52 ஆயிரத்து 961 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தங்களின் பணிக்கொடைத் தொகை தற்போது விடுவிக்கப்பட்டிருப்பது ஓய்வுபெற்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்போது பணியில் தொடர்ந்து சேவை ஆற்றி வரும் 1,200 மகளிர் பணியாளர்களின் வருங்கால பணிக்கொடை காப்பீட்டுத் திட்டத்திற்காக எல்.ஐ.சி. (LIC) நிறுவனத்திற்கு ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி பிரீமியமாகச் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களின் பணிக்கால சமூகப் பாதுகாப்பும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மொத்தம் ரூ.16 கோடியே 95 லட்சத்து 52 ஆயிரத்து 961 ரூபாய்க்கான பிரம்மாண்ட காசோலையை முதலமைச்சர் என். ரங்கசாமி துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மகளிர் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டு முதலமைச்சருக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

