தேசியம்

ஏர் இந்தியா விமான சேவையில் தொடரும் குளறுபடி: நடுவழியில் தவித்த தருமபுரம் ஆதீனம் கடும் அதிருப்தி!

மயிலாடுதுறை: ஏர் இந்தியா விமானத்தின் முறையற்ற நிர்வாகம் மற்றும் கடுமையான தாமதம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டதாக தருமபுரம் ஆதீனம் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் தரப்பினர், அங்கிருந்து மும்பை வழியாக சென்னை சென்று, வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழாவில் பங்கேற்று பின்னர் தருமபுரம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஏர் இந்தியா விமானத்தில் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, திட்டமிட்டபடி காசியில் இருந்து விமானம் புறப்பட்டது. இருப்பினும், மும்பை சென்றடைவதில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

மும்பையிலிருந்து மதியம் 1:05 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய இணைப்பு விமானத்தைப் பிடிக்க, பாதுகாப்புச் சோதனைகளை துரிதமாக முடித்துக்கொண்டு ஆதீனத் தரப்பினர் விரைந்தனர். ஆனால், அதற்குள் சென்னை செல்லும் விமானம் புறப்பட்டுவிட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த விமானத்தில் மட்டுமே செல்ல முடியும் என அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால் அவசரம் கருதி, மாலை 4 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், காசியில் பதிவு செய்யப்பட்ட உடைமைகள் (Baggage) வந்து சேருவதில் கடுமையான காலதாமதம் ஏற்பட்டது. அத்துடன் முனையத்தை (Terminal) மாற்ற வேண்டிய சூழல் இருந்ததாலும், ஏர் இந்தியா விமானத்தில் சென்றால் மட்டுமே உடைமைகளை எளிதாக மாற்றி ஏற்ற முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி இண்டிகோ டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்திலேயே காத்திருந்து பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைத்த பிறகும் கூட, அதன் செயல்பாடுகளிலும் நிர்வாக அணுகுமுறையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆதீனம் சார்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை உணராமல் அலட்சியமாக செயல்படும் போக்கு நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளதாகவும், விமானப் போக்குவரத்து துறை இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன