புதுச்சேரி

புதுச்சேரியில் ராதே அறக்கட்டளை சார்பில் நற்றமிழ் போற்றுதும் விழா மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி, நவம்பர் 7: புதுச்சேரி ஜெயராம் உணவகம் சங்கமித்ரா அரங்கில் ராதே அறக்கட்டளை சார்பில் நற்றமிழ் போற்றுதும் விழா மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு வெற்றி தமிழர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமை வகித்தார். வலைப்பதிவர் சிரகம் ரா சுகுமார் வரவேற்புரையாற்றினார். லால்பகதூர் சாஸ்திரி சேவைமன்ற நிறுவனர் கலிய முருகன் மற்றும் பொறிஞர் அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைமாமணி ராமதாசு காந்தி, படைப்பாளி பைரவி ஆகியோர் வாழ்த்து கவிதை வாசித்தனர். மக்கள் உரிமை கூட்டமைப்பு வழக்கறிஞர் கோ சுகுமாரன் வாழ்த்துரை வழங்கினார். அறக்கட்டளையின் நிறுவனர் பொறிஞர் ராதே நோக்க உரையாற்றினார்.

விழாவில் ராதே எழுதிய கொழுக்கட்டை சிறார் பாடல்கள் யூடியூபில் அறிமுகப்படுத்தப்பட்டு, புதுச்சேரி பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியர் புலம் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் ஆய்வுரையை நிகழ்த்தினார். மேலும், 2025-26 ஆம் கல்வி ஆண்டில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழி பாடத்தில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெள்ளி நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நூறு மதிப்பெண் பெற்ற ஏழு மாணவர்களுக்கு 10 கிராம் வெள்ளி நாணயங்களும், 99 மதிப்பெண்கள் பெற்ற 22 மாணவர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயங்களும் பரிசளிக்கப்பட்டன.

புதுச்சேரி திருவள்ளுவர் மன்ற தலைவர் கலைமாமணி சுந்தரலட்சுமி நாராயணன் உயர் மதிப்பெண் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆசிரியர் பெருமக்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி சான்றிதழ்களை வழங்கினார். பரிசு பெற்ற மாணவர்கள் பயின்ற அரசுப் பள்ளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சிவ செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன