புதுச்சேரியில் பிரிவினைவாதத்தை எதிர்ப்போம் ஜனநாயகத்தை காப்போம் முழக்கத்துடன் ஏபிவிபி மாணவர் அமைப்பு பேரணி
புதுச்சேரி, நவம்பர் 7: புதுச்சேரியில் அகில பாரதிய வித்யாத்ரி பரிஷித் (ABVP) மாணவர் அமைப்பு சார்பில் பிரிவினைவாதத்தை எதிர்ப்போம் ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் மாணவர் பேரணி நடைபெற்றது.
சாரம் அவ்வை திடலில் தொடங்கிய இந்த பேரணியை ஏபிவிபி தென் மண்டல அமைப்பு செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். ராஜா தியேட்டர் மற்றும் அண்ணா சிலை வழியாகச் சென்று அஜந்தா சிக்னல் அருகே இப்பேரணி நிறைவடைந்தது.
இப்பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏபிவிபி வடதமிழக மாநில செயலாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், தவறான பரப்புகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முடியாதவர்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்தி ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக குற்றம் சாட்டினார். மேலும், ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், நீதிமன்றத்தை அணுகுவதே சரியான வழிமுறை என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஏபிவிபி தேசிய செயற்குழு உறுப்பினர் தீபன் பேசுகையில், மாணவர்களையும் இளைஞர்களையும் இடதுசாரி அமைப்புகள் தங்களது அரசியல் போராட்டங்களுக்கு தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய கொடிகள் மற்றும் பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.