மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம் கருவடிகுப்பத்தில் நடைபெற்றது
புதுச்சேரி, நவம்பர் 7: புதுச்சேரி கருவடிகுப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் நீண்டகால பராமரிப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி சத்யா சிறப்புப் பள்ளி மற்றும் புதுச்சேரி சமூக நலத்துறை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் 250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பெற்றோர் இல்லாத காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால பாதுகாப்பு, பராமரிப்பு, சுயசார்பு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சத்யா சிறப்புப் பள்ளி இயக்குநர் சித்ரஷா வரவேற்புரையாற்ற, சமூக நலத்துறை இயக்குநர் ராகினி வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை மைத்திரி அமைப்பின் கௌரவ செயலாளர் ஜான் ராஜ்குமார் கருத்தரங்கை நடத்தி, மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் நீண்டகால பராமரிப்பு திட்டமிடல் குறித்து வழிகாட்டினார். சத்யா சிறப்புப் பள்ளியின் தலைமை செயல் அலுவலர் ஆனந்த் நன்றி கூறினார்.