லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைப்பு!

லால்குடி: லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் முன்னெடுப்பில், லால்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர பயன்பாட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் முறைப்படி திறந்து வைத்தார். மேலும், அவரது ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமில் 650-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று நலம் பெற்றுள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு லால்குடி மணக்கால் டான் போஸ்கோ ஐடிஐ (Don Bosco ITI) வளாகத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம், இலவச செயற்கைக் கால் வழங்கும் முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் மிக விரிவாக நடத்தப்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, லட்சுமி மருத்துவமனை, திருச்சி விஷன் கண் மருத்துவமனை மற்றும் வம்சம் கருத்தரித்தல் மையம் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகளையும் மருந்துகளையும் இலவசமாக வழங்கின.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் லால்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடியாகப் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளையும் உரிய சிகிச்சைகளையும் பெற்றனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் 27 நபர்களுக்கு இலவச நவீன செயற்கைக் கால்கள் பொருத்துவதற்கான அளவீடுகள் சிறப்பு மருத்துவர் குழுவினரால் துல்லியமாக எடுக்கப்பட்டன. தொடர்ந்து, லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாள்தோறும் வருகை தரும் ஏழை எளிய நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்குத் தூய்மையான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய ₹5 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அடிப்படை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்கள் நலப்பணிகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளன.
