தேசியம்

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம்: மக்கள் மைய வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பை நாடாளுமன்றங்கள் முன்னெடுக்க வேண்டும் – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சம்விதான் சதனில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தின் (12th BRICS Parliamentary Forum 2026) தொடக்க அமர்வில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார். உலகளாவிய மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாடாளுமன்றங்களின் பங்கு மிக இன்றியமையாதது என அவர் தனது உரையில் ஆழமாக எடுத்துரைத்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பு தனது இருபது ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த மன்றம் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்கும், கூட்டு உலகளாவிய அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கும் ஒரு வலுவான தளமாகத் திகழ்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். உலகின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிக்ஸ் நாடுகள், ஜனநாயக விழுமியங்களை வளர்ப்பதிலும், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

‘மக்கள் மைய வளர்ச்சிக்கான நாடாளுமன்றங்களை ஊக்குவித்தல்’ (Fostering Parliaments for People-Centric Development) என்ற முக்கிய கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மன்றம் நடைபெறுவதைக் குறிப்பிட்ட ஓம் பிர்லா, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும் தற்கால உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை விரிவாக எடுத்துரைத்தார். நாடாளுமன்றங்கள் வெறும் சட்டமியற்றும் அமைப்புகளாக மட்டும் செயல்படாமல், அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிர்வாகத் தளங்களாகச் செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், நெகிழ்ச்சித்தன்மை, புதிய கண்டுபிடிப்புகள், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை (Resilience, Innovation, Cooperation and Sustainability) ஆகிய நான்கு தூண்கள் குறித்து இந்த மன்றத்தில் விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நாடாளுமன்ற அமைப்புகளை மக்களுக்கான அதிக பொறுப்புடைமை கொண்டவையாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும், விரைந்து செயல்படும் அமைப்புகளாகவும் மாற்ற புதிய வழிகளை வகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய நவீன யுகத்தில் இளைஞர்களை அனைத்துத் துறைகளிலும் வலுப்படுத்துவதும், அவர்களின் கனவுகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தலையாய கடமையாகும் என்று ஓம் பிர்லா குறிப்பிட்டார். அதே வேளையில், பொருளாதார வளர்ச்சியை எட்டும்போது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை சமரசம் செய்து கொள்ளாமல் சமநிலை பேண வேண்டும் என்றும், சர்வதேச அரங்கில் ‘குளோபல் சவுத்’ (Global South) எனப்படும் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்வதை இந்த மன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மாநாட்டு விவாதங்களின் நிறைவாக, உறுப்பு நாடுகளுக்கிடையே நாடாளுமன்றப் கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என்றும், ஆழமான உரையாடல்கள் மூலம் நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி, அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச சூழலை உருவாக்க வழி பிறக்கும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன