புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 29 பேர் அதிரடி கைது!
புதுச்சேரி, அக். 28: புதுச்சேரி நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 29 நபர்களைக் காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை பிரதான சாலையில் மர்ம நபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபடுவதாக ரோந்துப் பணியில் இருந்த போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவர் பெரிய முதலியார்சாவடி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று ரெட்டியார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மேட்டுப்பாளையம் மற்றும் கோரிமேடு காவல் நிலைய எல்லைகளில் குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தியதாக தலா 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
லாஸ்பேட்டை காவல் நிலைய சரகத்தில் 3 பேரும், ஒதியஞ்சாலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு கலாட்டா செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.