கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்த வேண்டும்: புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் அதிரடி உத்தரவு!
புதுச்சேரி, அக். 28: புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ரோந்துப் பணிகளை பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் வாராந்திர குற்ற ஆய்வு ஆலோசனைக் கூட்டம் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் (எஸ்.எஸ்.பி) ராகவ், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் (எஸ்.பி.), காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) சட்டப் பிரிவுகள் மற்றும் கடந்த வாரம் புதுச்சேரியில் பதிவான குற்றச் சம்பவங்கள், நிலுவை வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் அறிவுறுத்துகையில், “கிராமப்புறப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை ஒடுக்கவும் அங்குள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 முறை வரை போலீசார் தீவிர வாகன ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். அதேபோன்று நகர்ப்புற காவல் நிலைய எல்லைகளில் நாள்தோறும் குறைந்தது 7 முறையாவது சுழற்சி முறையில் ரோந்து சென்று தீவிரக் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.