புதுச்சேரி

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லோநாத்: நேரில் வாழ்த்திய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி, 28/10/2024:

பராகுவே நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உலக ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த புதுச்சேரி வீரர் லோநாத் ஆர்.ஏ., புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுவை ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் (PRSA) சார்பில் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது, உலக அளவில் இந்தியாவிற்கும் புதுச்சேரிக்கும் பெருமை சேர்த்த இளம் வீரர் லோநாத் ஆர்.ஏ. முதலமைச்சரிடம் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த வரலாற்றுச் சாதனைக்காக அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், வருங்காலத்தில் மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என ஊக்கமளித்தார்.

மேலும், விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்கு உறுதுணையாக விளங்கும் புதுவை அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு ஆணையம், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோரின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பையும் முதலமைச்சர் பாராட்டினார்.

இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரியில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி மைதான (ரிங்க்) பகுதியைச் சுற்றிலும் சர்க்யூட் சாலை அமைக்கும் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை புதுவை ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் மனதார வரவேற்றுள்ளதுடன், இது மாநில அளவிலான ஸ்கேட்டிங் வீரர்களின் தீவிரப் பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன