குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் எச்சரிக்கை!
புதுச்சேரி, அக். 29:
புதுச்சேரி லோக் நிவாஸில் ஆளுநர் கே. கைலாஷ்நாதன் தலைமையில், உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் முன்னிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்தியசுந்தரம் மற்றும் சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், திவ்யா, ராகவ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் பேசுகையில், புதுச்சேரியில் சமீபகாலமாக கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருளான கஞ்சா புழக்கம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அதிருப்தி தெரிவித்தார். சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பிலும் நகரின் சட்டம் ஒழுங்கிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பொதுமக்கள் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்குவதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட தொடர் பண்டிகைக் காலம் வரவுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். குறிப்பாக, குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் காவலர்கள் மீதும், குற்றங்களுக்கு உடந்தையாகச் செயல்படும் போலீஸார் மீதும் இரக்கமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்தார்.
மேலும், ஒரே காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் நீண்டகாலமாக நகர்ப்புற காவல் நிலையங்களிலேயே பணிபுரியும் காவலர்களின் விவரங்களைத் திரட்டி, அவர்களை உடனடியாக பணியிட மாற்றம் (டிரான்ஸ்பர்) செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் அதிகாரிகளுக்கு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.


