வில்லியனூர் மூர்த்தி நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்: எம்.எல்.ஏ ரவிகுமார் முன்னிலையில் நடவடிக்கை!

புதுச்சேரி: வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூர்த்தி நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வகையில் பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணிகள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரவிகுமார் முன்னிலையில் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி வில்லியனூர் தொகுதி மூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்ததால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து கொள்ளும் நிலை நீடித்து வந்தது.
இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் தொற்றுநோய் அபாயம் குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு வந்தனர். பொதுமக்கள் விடுத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ ப.ரவிகுமார் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, தற்போது பொதுப்பணித்துறை சார்பில் மூர்த்தி நகரில் தொடங்கி புதிய பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பெரிய வாய்க்கால் வரையிலான வடிகால் பகுதியை முழுமையாக தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்காலில் தேங்கியுள்ள வண்டல் மண், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரை ஆகியவை துரிதமாக அகற்றப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ ரவிகுமார், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் எங்கும் மழைநீர் தேங்காதவாறு சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். புதுச்சேரி முழுவதும் உள்கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வரும் சூழலில், பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ ப.ரவிகுமாருக்கு மூர்த்தி நகர் பகுதி பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

