காரைக்கால்

காரைக்காலில் குடிநீர் குழாய் உடைப்பால் கழிவுநீர் கலக்கும் அவலம்: தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்!

காரைக்கால்: காரைக்கால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏற்பட்டுள்ள தீவிர உடைப்பு மற்றும் கசிவுகள் காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து விநியோகிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற தீவிர தொற்றுநோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

காரைக்கால் குடிநீர் வடிகால் பிரிவு அதிகாரிகளின் முறையான களக் கண்காணிப்பு இல்லாததே இந்நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. மேலும், குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் தருணங்களில் குழாய்களில் அழுத்தம் குறைவதால், அருகில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர் எதிர் அழுத்தத்தால் குழாய்களுக்குள் புகுந்து அசுத்தமான குடிநீராக மாறுகிறது. இவ்வாறு அசுத்தமான நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தீவிர காய்ச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, காரைக்காலில் உள்ள பல்வேறு தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அரசு பொதுமருத்துவமனையை விட தனியார் மையங்களிலேயே நோயாளிகள் அதிகளவில் திரள்வதால், அரசு மருத்துவமனை கூட்டத்தை மட்டுமே வைத்து மக்கள் ஆரோக்கியமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தவறாகக் கணக்கிடக் கூடாது எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை வாழ்வுரிமையாகும். எனவே, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த பழைய குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும். அத்துடன் புதிய குடிநீர் இணைப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, துறைசார்ந்த அதிகாரிகளுக்குத் துரித நடவடிக்கைக்கான தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary: Residents and social activists in Karaikal town and suburbs say that breaks and leaks in drinking water pipes are letting sewage mix with the supplied water, raising fears of diseases such as cholera, diarrhoea and typhoid. The lack of proper field monitoring by the Karaikal drinking water and drainage division is cited as a main cause, and people with symptoms are crowding private clinics. Residents have urged the district administration to repair the old damaged pipes quickly and issue clear orders to officials.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன