புதுச்சேரி

உடான் திட்டம் மூலம் புதுச்சேரியிலிருந்து திருப்பதி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, நவம்பர் 1, 2026: மத்திய அரசின் திருத்தப்பட்ட ‘உடான்’ திட்டத்தின் கீழ் புதுச்சேரியிலிருந்து திருப்பதி, கொச்சி, ராஜமுந்திரி மற்றும் கண்ணூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவில் புதிய விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அங்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, தொடர்ந்து மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்தவும், புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் புதுச்சேரி அரசுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய விமானப் போக்குவரத்து வசதிகள் மூலம் பிராந்திய அளவிலான இணைப்பு மேம்படுவதோடு மட்டுமல்லாமல், புதுச்சேரியின் சுற்றுலாத் துறையும் பொருளாதாரமும் புதிய உச்சத்தை எட்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் ₹500 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஒரு மாநிலம் – ஒரு சர்வதேச சுற்றுலா தலம்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் 50 உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் புதுச்சேரியையும் இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

யூனியன் பிரதேசத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வணிக சீர்திருத்தக் கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற புதுச்சேரி வணிகச் சீர்திருத்தச் சட்டம் அண்மையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற அரசு தலையீடுகள் குறைக்கப்பட்டு, வெளிப்படையான சூழலில் புதிய தொழில் நிறுவனங்கள் எளிதாகத் தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமப்புறங்களில் 4,952 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 54,791 குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் 500 குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 250 குழுக்களுக்கு ₹3.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுழல் நிதி திட்டத்தின் கீழ் 323 சுயஉதவிக் குழுக்களுக்கு ₹96.90 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் விளக்கினார்.

பேரிடர் மேலாண்மையை நவீனப்படுத்த 70 வீரர்களைக் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) உருவாக்கப்பட்டு, முதற்கட்டமாக 35 வீரர்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் பேரிடர் பாதிப்பு வரைபடம் (Hazard Map) தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், தற்காலிக சபாநாயகர் ஏ. அன்பழகன், தலைமைச் செயலாளர் சரத் சவுகான், காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன