தமிழ்நாடு

ஆற்காடு உழவர் சந்தையில் இயற்கை விளைபொருட்கள் கண்காட்சி: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார் திறந்து வைத்தார்!

ஆற்காடு:

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு உழவர் சந்தை வளாகத்தில், இயற்கை முறையில் நஞ்சில்லாமல் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களின் கண்காட்சி மற்றும் சிறப்பு அங்காடிகள் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களிடையே இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பரிய தானியங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கண்காட்சி மற்றும் சிறப்பு அங்காடியை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமார் நாடா வெட்டி முறைப்படி திறந்து வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இயற்கை உரங்கள் கொண்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்திப் பொருட்களை அவர் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பு வேளாண்மை துணை இயக்குநர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஆற்காடு மற்றும் இராணிப்பேட்டை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பி. முருகன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் அவசியம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமார், இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில், திமிரி பேரூராட்சி மற்றும் கலவை பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக உழவர் சந்தை அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை வேளாண்துறை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் ஆற்காடு நகரச் செயலாளர் ஜிம் எம்.சங்கர், திமிரி பேரூராட்சி செயலாளர் தொழிலாளி டி.எஸ்.கந்தசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.கோ. அண்ணாமலை, எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பி. பிச்சாண்டி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், விவசாய பெருமக்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன