தமிழ்நாடு

தென்காசியில் நடிகர் விஜய் சேதுபதியின் தீபாவளி நலவாழ்வு விழா: 200 முதியவர்கள், குழந்தைகளுக்கு ஆடைகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்!

தென்காசி:
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையிலும், தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள சேனை தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில், துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர். இவர்களுடன் விஜய்சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் (VVVSI Trust), நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை உள்ளிட்ட சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டன.

விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதியோர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் என மொத்தம் 200 பயனாளிகளுக்குப் புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய நலத்திட்ட உதவிகள் வழங்கி தீபாவளி மகிழ்ச்சி பகிரப்பட்டது. எளிய மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் இத்தகைய மனிதநேய உதவி அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் ஒரு பகுதியாக ஆய்க்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களுக்காக நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். இதில் பொது மருத்துவர் ஆலோசனைகள், இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை பரிசோதனை, இதய மின் பதிவுப் பரிசோதனை (ECG) மற்றும் உணவுமுறை வழிகாட்டுதல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பண்டிகைக் காலத்தில் மருத்துவப் பரிசோதனைகள் கிராமப்புற மக்களுக்கு பேருதவியாக அமைந்தன.

பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியை தங்களுக்குள் மட்டுமே சுருக்கிக் கொள்ளாமல், தேவையுள்ள எளிய மக்களுடன் பகிர்ந்துகொள்வதே உண்மையான கொண்டாட்டம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்த நற்பணிக்கு பயனாளிகள் மற்றும் தென்காசி மாவட்ட பொதுமக்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன