தமிழ்நாடு

என்எல்சி கழிவுநீரால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், என்எல்சி சுரங்க கழிவுநீர் புகுந்து நெற்பயிர்கள் பாழான விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள கம்மாபுரம், சு.கீணனூர், கோபாலபுரம், கொம்பாடிக்குப்பம், ஊ.கொளப்பாக்கம் மற்றும் அரசகுழி ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் (NLC India Limited) இரண்டாம் சுரங்க பணிகளுக்காக வெட்டி குவிக்கப்பட்டிருந்த மண்மேடுகளிலிருந்து மட்டுமண் கலந்த மழைநீர் பெருக்கெடுத்து அருகிலிருந்த விவசாய நிலங்களுக்குள் பாய்ந்தது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி, பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலும் நாசமாகின.

என்எல்சி நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இத்தகைய பெரும் பாதிப்பு குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விரிவான புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் அப்பகுதிக்கு வருகை தந்தார்.

கம்மாபுரம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர், வயல்களில் தேங்கியுள்ள சுரங்கக் கழிவுநீரையும், அழுகிய நிலையில் உள்ள நெற்பயிர்களையும் நேரில் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது இழப்புகளை விளக்கி, உரிய நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பயிர் சேதம் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன