தேசியம்

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட்

புதுச்சேரி, அக்டோபர் 27: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

வழக்கமான மென்பொருள் கட்டமைப்பிற்கான செலவுகளை குறைத்துவிட்டு கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக சுமார் 190 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள அதன் 2,23,000 ஊழியர்களில் சுமார் 27 சதவீதம் பேர் இதனால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள நடுத்தர நிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு வயது வரம்போ அல்லது நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ இல்லை. ஊழியர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அடிப்படை சம்பளத்துடன் கூடிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

தகுதியுள்ள ஊழியர்கள் இந்த திட்டத்தை ஏற்பதா வேண்டாமா என்பதை வரும் டிசம்பர் தொடக்கத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள் டிசம்பர் மாத இறுதியில் நிறுவனத்தை விட்டு முறைப்படி வெளியேறுவார்கள். கட்டாய பணிநீக்கம் போல இல்லாமல் ஊழியர்களே தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை திட்டமிட இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என மைக்ரோசாப்டின் மனிதவள அதிகாரி ஆமி கோல்மேன் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன