கோரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போராட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 27: தட்டாஞ்சாவடி தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு நடவடிக்கை கோரி கோரிமேடு காவல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாகக் கூறி பொதுமக்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அக்டோபர் 26ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் கோரிமேடு காவல் நிலையத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டார். திருப்திகரமான பதில் கிடைக்காததால் காவல் நிலைய நுழைவுவாயில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் வம்சித ரெட்டி மற்றும் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் புகார்கள் மீது இனி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் கைவிட்டார்.